நீட் விலக்குக்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை தமிழக அரசு உடனே பெற வேண்டும்

நீட் விலக்குக்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை தமிழக அரசு உடனே பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018 ஆம் ஆண்டிற்கான நீட் கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் 49 பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். . அதனால் பல மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன எனவும், இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த தீர்ப்பிற்கும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை பெற்று, தமிழக மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் அளித்த நீதியையும் பாஜக அரசு மறுத்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற கேள்வித்தாள் மொழி பெயர்ப்பு குழப்பங்களால், மாநில மொழிகளில் தேர்வு எழுதினால் மருத்துவர் கனவு பறிபோகும் என்ற பதற்றம் மாணவ – மாணவியர் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் “மருத்துவக் கனவை” நீட் தேர்வின் மூலம் சிதைத்துள்ள மத்திய பா.ஜ.க. மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதை ஊக்குவித்திடவும் உரிய ஏற்பாடுகளைச் செய்யாமல், வஞ்சித்ததன் விளைவாக, மாநில மொழிகளில் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்து “மாயமாகி” வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே,, மருத்துவக் கல்வியில் சேருவதற்கான “நீட் தேர்வுக்கு” விலக்கு கேட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாவிற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய பா.ஜ.க. அரசு உடனே பெற்றுத் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடுவதற்குள் இந்த மசோதாவிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழகத்தில் ஏற்கனவே இருந்த ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு ஏற்ற சூழலை உருவாக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு அதிமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

Related Posts