நீதிபதி அருணா ஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது.

                தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற  நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன், கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது,பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்களை பெற்றுக் கொண்ட அவர், அந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு மொத்தம்24 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

                4-வது கட்ட விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விசாரணைக்காக மொத்தம் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் நேற்று முன்தினம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட 8 பேரில் 7 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நேற்று ஆஜராவதற்காக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 7 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நீதிபதி அருணாஜெகதீசன் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினார். விசாரணை நடக்கும் முகாம் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது

Related Posts