நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாய் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாய் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாயை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், கடந்த 3-ந் தேதி, நீதிபதி ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து ரஞ்சன் கோகாய், வரும் 3-ந் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்.பி.லுத்ரா, சத்யவீர் சர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், கடந்த ஜனவரி 12-ந் தேதி, நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோருடன் நீதிபதி ரஞ்சன் கோகாயும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாகவும், உச்சநீதிமன்றத்தில் நிலவிய உட்பூசல்கள் குறித்து பொதுமக்களின் கோபத்தை தட்டி எழுப்ப முயன்றதாகவும் மனுவில் கூறியிருந்தனர். மேலும், நீதிபதி ரஞ்சன் கோகாயின் செயல், உச்ச நீதிமன்றத்துக்கு எதிரானது எனவும் அவரது நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி நியமனத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், ரஞ்சன் கோகாய்க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Posts