நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

தொழிலதிபர் நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடிக்கு சொந்தமான 637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. நியூயார்க்கில் உள்ள நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.216 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. நீரவ் மோடிக்கு வெளிநாடுகளில் உள்ள 5 வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அவற்றில் உள்ள ரூ.278 கோடியும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து ரூ.22.69 கோடி மதிப்பிலான வைரம் பொறிக்கப்பட்ட தங்க நகைகளும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தெற்கு மும்பையில் உள்ள ரூ.19.5 கோடி மதிப்பிலான வீடும் முடக்கப்பட்ட சொத்தில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து ரூ.13 ஆயிரம் கோடி வரை கடன் பெற்ற தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவர்களை நாடு கடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள நீரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் மூலமாக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts