நீர்நிலைகளைப் பாதுகாக்க, அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்க வேண்டும்:  உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர் மேனன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடலில் வெள்ள நீர் வீணாகக் கலப்பதைத் தடுக்கவும், சென்னையில் நவீன நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளை அதிகப்படுத்துவதன் மூலம் வெள்ள நீர் வீணாகக் கடலுக்குச் செல்வதைத் தடுக்க முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நீர்நிலைகளைப் பாதுகாக்க 100 கோடி ரூபாய் செலவில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவுநீர் கால்வாய்களை 6 மாத காலத்துக்குள் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பணிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்த கடமைகளில் இருந்து தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது..

 

Related Posts