நீர்நிலைகளை கண்ணின் இமைபோல பாதுகாக்க வேண்டும் : முதலமைச்சர் பழனிசாமி

விவசாயிகள் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை கண்ணின் இமைபோல பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் 2ஆவது நாளாக சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதியவர்களே அதிகளவு மனுக்களை கொடுப்பதாக அவர் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு தொடங்கிய குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளை உள்ளடக்கியதே என்றும், பருவகாலத்தில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது என்பதுதான் குடிமராமத்து பணிகளின் நோக்கம் என‌வும்‌ அவர் கூறினார். ஊராட்சி பகுதிகளில் இருக்கும் சிறு குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க ஆயிரத்து 250 கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய இருப்பதாக அவர் கூறினார். ஆயிரத்து 200 ஏக்கரில் அதனை நடைமுறைப்படுத்த திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றார் அவர். இந்த கால்நடைப் பூங்கா வரும்போது, கால்நடை ஆராய்ச்சி மையமும், கால்நடை மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்பட உள்ளதாக கூறிய முதலமைச்சர், கால்நடைப் பூங்கா அமைந்தால் இந்தப் பகுதி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த நிக‌ழ்ச்சியின்போது, பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று முதலமைச்சரிடம் மனுக்களை அளித்தனர். ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்ற கு‌றைதீர்ப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். சேலம் மாவட்டம் அபிநயம் கிராமத்தில் அணைக்கட்டு மற்றும் ஏரி புனரமைக்கும் பணியை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், விவசாயம் என்பது எளிதல்ல என்றும் அது ஒரு கடினமான பணி , விவசாயிகளுக்கு ஓய்வே கிடையாது என்றார். தான் விவசாயி என்பதால் விவசாயியின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Posts