நீர்நிலைகள் அனைத்தையும் தூர் வார வேண்டும் – வைகோ

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் நீர்நிலைகள் அனைத்தையும் தூர் வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரு மழை காரணமாக,  கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்டஇலட்சக்கணக்கான கன அடி நீரை, சேமிக்கும் வகையில் மேட்டூர் அணை பராமரிக்கப்படாததால், முழு கொள்ளளவான 93 புள்ளி 47 டி.எம்.சி. நீர் தேக்க முடியாமல் சுமார் 60 டி.எம்.சி. நீரை மட்டுமே சேமிக்க முடிவதாக கூறியுள்ளார்.

கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு சுமார் 1புள்ளி 75 இலட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டும், நாகை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய், ஏரி, குளங்கள் தூர் வாரி முறையாக பராமரிக்கப்படாததால்  தண்ணீர் சென்று  சேரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட குளங்களில் சுமார் 50 விழுக்காடு குளங்களில் மட்டுமே நீர் நிரம்பி உள்ளது எனவும் அதே வேளையில் அங்குள்ள 16 ஏரிகளில் ஒன்றுகூட நிரம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தில் காவிரியின் கிளை ஆறுகளான வீரசோழன் ஆறு, மஞ்சள் ஆறு, மானங்கொண்டான் ஆறுகளின் பாசன பகுதியானகடைமடை க்கு இதுவரை தண்ணீர் சென்று சேரவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

வெள்ள நீர் செல்லும் ஆற்றுக்கு அருகில் உள்ள நீர் நிலைகள்கூட தண்ணீர் இன்றி காய்ந்து கிடப்பதாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி  நீரை நம்பி சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும் நிலையில், காவிரி நீர் அந்த மாவட்டத்திலும் போதுமான அளவில் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வீராணம் ஏரியை தூர் வாரி முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் முழு அளவில் நீரைத் தேக்க முடியாமல், தண்ணீர் திறந்துவிடப்படப்டுவதாகவும், இதனால்,, கடலூர் மாவட்டத்தில் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முப்பது கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏரி, குளம், பாசன வாய்க்கால்களில் விவசாயிகள் குடிமராமத்துப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வண்டல் மண், சவுடு மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என கடந்த ஆண்டு தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது எனவும், எனினும் முறையாக அப்பணிகள் நடைபெறவில்லை என அவர் கூறியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் நீர்நிலைகள் அனைத்தையும் தூர் வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Posts