நீலகிரிக்கு 30 கோடி ரூபாயை நிவாரணம் : எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சமீபத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட  நீலகிரிக்கு, உடனடி நிவாரணப் பணிகளுக்கு 30 கோடி ரூபாயை ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் பெய்த தொடர்மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக நீலகிரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நீலகிரிக்கு உடனடி நிவாரணப் பணிகளுக்கு 30 கோடிரூபாயை ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்திற்காக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகையை ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் உடனடியாக மாவட்டத்தில் சேதமடைந்துள்ள உட்கட்டமைப்புகளின் முழுமையான சீரமைப்பிற்கு தேவையான நிதி குறித்த  முன்மொழிவுகளை உருவாக்கி, மத்திய அரசுக்கு அனுப்பவும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இயற்கைக் சீற்றத்தில் முழுமையாக சேதமடைந்துள்ள 296 குடிசைகளுக்கு 5000 ரூபாய் நிவாரணமும், பகுதியாக சேதமடைந்துள்ள 1225 குடிசைகளுக்கு 4100 ரூபாய் நிவாரணமும் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முழுமையாக சேதமடைந்துள்ள வீடுகளுக்கு பதிலாக பசுமை இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், சேதமடைந்துள்ள பயிர்கள் குறித்த முழுமையான விபரங்களை ஆகஸ்ட்  16-ஆம் தேதிக்குள்   சேகரித்து அனுப்ப மாநில தோட்ட கலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Posts