நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு

 

 

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்தி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல், பருப்பு வகைகள் மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  தொடர்ந்து நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 200 ரூபாயும், மக்காச்சோளத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு 275 ரூபாயும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், சாதாரண ரக நெல்லுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை ஆயிரத்து 550 ரூபாயில் இருந்து ஆயிரத்து 750 ரூபாயாக வழங்கப்படும். அதேபோல், ஆயிரத்து 425 ரூபாயாக இருந்த மக்காச்சோளத்துகான குறைந்தபட்ச ஆதார விலை, தற்போது ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 675 ரூபாய் எனவும், பாசி பயருக்கான விலை 6 ஆயிரத்து 975 ரூபாய் எனவும், உளுந்துக்கான விலை 5 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார  விலையும் 4 ஆயிரத்து 20 ரூபாயில் இருந்து, 5 ஆயிரத்து 150 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  

Related Posts