நெல்லுக்கான விலையை அறிவிக்காததைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அறிவிக்காததைக் கண்டித்து  விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டியும், வைக்கோல் கட்டுக்களை தலையில் சுமந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கும்பகோணத்திற்கு கடந்த மாதம்  வருகை தந்து பேட்டியளித்த வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு மத்திய அரசின் குறைந்தபட்ச நெல்லுக்கான ஆதார விலையை அறிவித்திருந்த நிலையில் மாநில அரசும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான ஆதார விலையை நடப்புக் கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வேன் என தெரிவித்திருந்தார்.

 

ஆனால் சட்டமன்ற கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில் இதுவரை மாநில அரசின் நெல்லுக்கான ஆதார விலையை அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஏராளமான விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் நெல்லுக்கான ஆதார விலையை அறிவிக்கக்  கோரி நெல் மணிகளை சாலையில் கொட்டியும், வைக்கோல் கட்டுக்களை சுமந்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து  கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.

 

இந்த கூட்டத்தில் அதிகாரிகள் சிலர் கலந்து கொள்ளாததற்கும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்

 

Related Posts