நெல்லையில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர் அடித்துக்கொலை

 

 

நெல்லையில் மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற காவலரை, மணல் கொள்ளையர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர், தெற்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில், தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நம்பியாற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து, நேற்றிரவு நம்பியாற்றுப் பகுதிக்கு காவலர் ஜெகதீஷ் ரோந்து பணிக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு டிராக்டர் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை, காவலர் ஜெகதீஷ் கண்டித்ததுடன், அவர்களை கைது செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள், இரும்பு கம்பியால் காவலர் ஜெகதீஷின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த காவலர் ஜெகதீஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரவு ரோந்துப் பணிக்கு சென்ற காவலர் காலை வரை, காவல் நிலையம் வராததை அடுத்து, சக காவலர்கள் நம்பியாறு பகுதிக்குச் சென்றபோது, அங்கு காவலர் ஜெகதீஷ் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, அவரது உடலை மீட்ட காவல்துறையினர், கொலையாளிகளை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Posts