நெல்லை மாவட்டத்தில் இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு  நிவாரணங்களை வழங்கிட வேண்டும்: வைகோ 

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராது வீசிய சூறைக்காற்றால் பல இலட்சம் வாழைகள், மற்றும் தென்னை மரங்கள்  விழுந்து விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

மேலும் அவர், அறிவியல் உபகரணங்கள், வானிலை நிலவரங்களால் உணரப்படாத இச்சூறைக்காற்றால் நான்குநேரி, இராதாபுரம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் வட்டங்களைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதே வேளையில்,  குமரி மாவட்டத்தில் சில இடங்களில் தென்னை மரங்களும், வேம்பு, வாகை உள்ளிட்ட  மரங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன என்றும், ஒரு சில இடங்களில் கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளன. ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்து உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,வங்கிகளிலும், தனியாரிடமும் கடன் வாங்கி ஓரளவு வருவாய் ஈட்டலாம் என்று நம்பி வாழை பயிரிட்ட விவசாயிகள் நிலையை நினைக்கும்போது தாங்க முடியாத வேதனை ஏற்படுகிறது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சூறைக்காற்றுடன்  கூடிய மழையில், புகழ்பெற்ற கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்லும் அரிய வகை பறவையினங்களும் பரிதாபமாக இறந்துள்ள செய்தியும், படங்களும் மனதை வாட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, சூறைக்காற்றுத் தாக்குதலால் சேதமடைந்துள்ள வாழைகள், தென்னை உள்ளிட்ட மரங்கள், வீடுகள் விபரங்களை அரசுத் துறையினர் விரைவாக கணக்கெடுத்து, தேவையான நிவாரணங்களை வழங்கிட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

 

Related Posts