நேரு நினைவிடத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் – முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்

நேரு நினைவிடத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டள்ளார்.

                இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு வசித்து வந்த தீன் மூர்த்தி பவன் அவரது மறைவுக்கு பிறகு நேருவின் நினைவாக அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீன் மூர்த்தி பவனில் அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

              இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள  கடிதத்தில், மறைந்த பிரதமர் நேருவின் பாரம்பரியம் மற்றும் வரலாறுகளுக்கு மதிப்பளித்து எந்தவித இடையூறும் செய்யாமல் அவரது நினைவு வளாகத்தை விட்டு விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நேரு காங்கிரசை மட்டும் சார்ந்தவரல்ல,  அவர் ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சொந்தமானவர்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

             வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நேரு அருங்காட்சியகம் மற்றும நூலகத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள மன்மோகன்சிங், இந்த அரசுக்கு அதில் மாற்றம் ஏற்படுத்துவது ஒரு கொள்கையாக இருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நேரு என அவர் கூறியுள்ளார்.

              சுதந்திர போராட்டத்தின் போது 1920 முதல் 1940 வரை நேரு பலமுறை கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் எனவும் அவரின் மேன்மையை போற்றும் வகையில் அருங்காட்சியகம் அங்கு தொடர்ந்து இருந்திட வேண்டும் எனவும் அந்தக் கடித்த்தில் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts