நேற்று வீடு திரும்பினார் வைகோ

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இராமச்சந்திரா மருத்துவமனை சிகிச்சையில் நலம் பெற்று நேற்று வீடு திரும்பினார்.

மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி பொதுச்செயலாளர் வைகோ ஓய்வு எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானூர்தி நிலையத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்ப் பலகைகளை அகற்றியது உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக வைகோ வேதனை தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதைக் கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறப் போராட்டம் நடத்தியதையும், கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதையும் வைகோ நினைவு கூர்ந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பெயர் பலகைகளை மீண்டும் உடனடியாக வைக்கக்கோரி விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவானுக்கு வைகோ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதாகவும் மதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Posts