பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சாலை அமைக்கும் பணி திட்டத்தில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும் என்றும் ஆனால் இதனை அரசு நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Posts