பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அ.தி.மு.க. துணை நிற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.அழகர்சாமி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க.வை உடைக்கவும், அ.தி.மு.க. அரசை கலைக்கவும் தொடர்ந்து முயற்சி செய்யப்படுவதாக தெரிவித்தார். அ.தி.மு.க. இயக்கம் வலிமையான, உறுதியான கட்டுக்கோப்பான தொண்டர்களைக் கொண்ட ஒரு பேரியக்கம் என்றும் இதை யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பட்டாசு தொழிலை இந்த அரசு பாதுகாக்கும் என்றும் உற்பத்தி செய்யும் உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், அரசின் சார்பில் தனியாக ஒரு வழக்கறிஞரை நியமித்து உச்சநீதிமன்றத்திலே வாதாடி, பட்டாசு தொழில் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

Related Posts