பணம் செலுத்தி பார்க்கும் கேபிள் டி.வி. சேவை: இன்று முதல் அமல்

விரும்பிய சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் கேபிள் டி.வி. சேவை, திட்டமிட்டபடி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

டி.டி.எச். சேவையிலும், கேபிள் டி.வி. சேவையிலும் நாம் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, பார்வையாளர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்து, அதற்கு மட்டும் பணம் செலுத்தும் புதிய முறையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.

கடந்த மாத இறுதியிலேயே இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், பார்வையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்வகையில், இத்திட்டம் பிப்ரவரி 1-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த புதிய நடைமுறை,  இன்று முதல் திட்டமிட்டபடி அமலுக்கு வருகிறது. இத்தகவலை‘டிராய்’ அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.

அது போல டி.டி.ஹெச். சேவையில் நீண்ட கால தொகுப்புகளை தேர்வு செய்து முன்கூட்டியே பணம் செலுத்தியவர்களுக்கு அவர்களது பணத்துக்கான உத்தரவாதத்தை டி.டி.ஹெச். நிறுவனங்கள் மதித்து நடக்க வேண்டும் என்று டிராய் கூறியுள்ளது.

அவர்கள் பழைய முறையிலேயே நீடிக்க விரும்பினால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள், விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் பார்க்க விரும்பினால், அதற்குரிய பணத்தை மட்டும் வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து முறையாக கழிக்க வேண்டும் என்றும் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.

Related Posts