பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்: வைகோ வாழ்த்து

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான   பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 82 பள்ளிகளில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவ, மாணவிகளும், 26 ஆயிரத்து 885 தனித்தேர்வர்களும் +2 தேர்வை எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வில் மாணவர்களுக்கு இணையான சம எண்ணிக்கையில் மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் அனைவரும் தேர்வு பயமின்றி மிக நிதானமாக தேர்வு எழுதி வெற்றி பெற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உயர்நிலைக் கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவு வாயிலாகக் கருதப்படும் பொதுத் தேர்வு என்பதால் மாணவர்கள் மிக உற்சாகமாக தேர்வு எழுதி வெற்றி காணவேண்டும்.

இந்தப் பொதுத் தேர்வுக்காக 2 ஆயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் அருகில் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடுகிற குழுவினரோ ஒலிப்பெருக்கியை சத்தமாக இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட வேண்டும். அதிர்வேட்டுகள் வெடிக்கக் கூடாது.

மாணவர்கள் தேர்வுக் கூடங்களுக்கு உரிய நேரத்தில் செல்லும் வகையில், பேருந்துகளை முறையாக அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்திட தமிழக அரசின் போக்குவரத்துத் துறை வழிவகை செய்திட வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும் வகையில் பெற்றோர் அவர்களிடம் ஒவ்வொரு நாளும் பேச வேண்டும். எவ்வித மன அழுத்தமோ, அச்சமோ இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத அது உதவும்.

மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு முன்பு, மனதை ஒருநிலைப்படுத்தி வினாத் தாளை நன்கு படித்து அதற்குரிய பதிலை எழுதிட வேண்டும்.

இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாமல் போனாலோ அல்லது தேர்வில் தோல்வியுற்றாலோ மாணவர்கள் மனநிலை பாதிப்படையத் தேவையில்லை. தமக்கான திறமையை நன்கு உணர்ந்து, பெற்றோரின் பாசம் அறிந்து, மாணவர்கள்  அடுத்தத் தேர்வுக்கு ஆயத்தமாகிடும் வகையில் தன்னை ஆற்றுப்படுத்திட வேண்டும் என்றும் தங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts