பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற வேண்டும்: கேரள காவல்துறை உத்தரவு

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு, கேரள போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, பெண்கள் பலர் கோவிலுக்கு செல்ல முயன்று வருகின்றனர். ஆனால், 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி, அய்யப்பன் பக்தர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், நாள்தோறும் பதற்றமான சூழலே நிலவுகிறது.

இது தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக, பல்வேறு தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களின் செய்தியாளர்களும், சபரிமலை சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் குவிந்துள்ளனர். இந்நிலையில், சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருக்கும் செய்தியாளர்கள் மீது போராட்டக்காரர்கள் சிலர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளதாக, கேரள போலீசாருக்கு, உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், செய்தியாளர்கள் அந்த பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு, கேரள போலிசாரும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Posts