பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை நீடித்து வரும் நிலையில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்றும் மழை நீடித்து வருவதால் உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகள் மற்றும்கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின்அணைகள் நிரம்பி உபரிநீர் பவானி மற்றும் மாயாற்றில் திறக்கப்பட்டது.

இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 113 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 64.83 அடியாகவும், நீர் இருப்பு 8.9 டிஎம்சி யாகவும் உள்ளது. நீர்வரத்து காரணமாக ஒரேநாளில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானிவாய்க்காலில் 205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Posts