பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாத அமைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று  இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டுகளை வீசி அழித்தது. இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,  அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நேற்று நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய வெளியுறவு துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜூடன் பேசியதாகவும்,. அப்போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பராமரிப்பது தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்ததாகவும் கூறியுள்ளார்.  .இதேபோல் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷியிடமும் பேசியதாகவும்,  அவரிடம், பாகிஸ்தானில் உள்ள அனைத்து  பயங்கரவாத அமைப்புகள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை தவிர்த்துவிட்டு, நேரடியாக கலந்துரையாடி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை கொண்டு வர வேண்டும் என இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் பிறக்க வேண்டும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது

Related Posts