பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் 42 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி 

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை கையாளுவது பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு, சர்வதேச நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், சர்வதேச நிதியத்துக்கும் இடையே பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

இந்த நிலையில், வெளிநாட்டு கடன் சுமைகளை குறைப்பதற்காக பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க சர்வதேச நிதியம் முன்வந்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் சர்வதேச நிதியத்தின் இயக்குநர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts