பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி 116 இடங்களில் வெற்றி: ஆட்சியமைப்பதில் இழுபறி

 

 

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சி 270 தொகுதிகளில் போட்டியிட்டு 116 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 64 தொகுதிகளிலும், முன்னாள் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில் 272 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டள்ளன. கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் 70 உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி ஆட்சி அமைப்பதற்கு ஒரு கட்சி 137 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இம்ரான் கட்சிக்கு 116 இடங்களே கிடைத்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கு மேலும் 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தேர்தலில் இரண்டாவது மற்றும் மூன்றவாது இடம் பிடித்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை ஊழல் கட்சிகள் என்பதால் அவற்றுடன் கூட்டணி கிடையாது என்று ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இதையடுத்து 13 சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்களுடன் இம்ரான் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதரவைப் பெற முடிந்தால் மட்டுமே இம்ரான் ஆட்சி அமைக்க முடியும். இதற்கிடையே, தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத சில கட்சிகள், மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

Related Posts