பாஜகவின் அழைப்பை நிராகரித்த ரஜினிகாந்த்

பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினிகாந்த் நிராகரித்துள்ளதாகக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு உருவானது. டெல்லி பா.ஜ.க. மேலிடமும் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது.  ரஜினிகாந்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினிகாந்த் மறுத்து விட்டதாக தெரிகிறது. தன்னை தொடர்பு கொண்ட பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம், தான் இப்போது ‘தர்பார்’ படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதாகவும், தன்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று தனிக்கட்சி தொடங்கவே விரும்புவதாகவும் அவர் கூறியதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஒப்புக் கொண்டு இருக்கும் படங்களை பிப்ரவரி மார்ச் மாதத்திற்குள் முடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டு உள்ளார். அடுத்த ஆண்டு தை மாதத்திற்கு பிறகு தனிக்கட்சியை அறிவிக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார். தேசிய தமிழர் முன்னேற்றக் கழகம் என கட்சிக்கு பெயர் சூட்டப்படலாம் என கூறப்படுகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக சில கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்து வருவதால், அவர் கட்சி தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்று கருதப்படுகிறது.

Related Posts