பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை – தம்பிதுரை

பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

                மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தேர்தல் முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், 51 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னார் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், வாக்குப்பதிவு இயந்திரத்தில் திருத்தம் செய்து, மக்கள் கருத்துக்கு மாறாக ஒருவர் வெற்றி பெறும் சூழ்நிலை வருமானால் இயந்திரத்தையே நீக்கிவிட்டு, பழையபடி வாக்குச் சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். விவிபேட் பற்றி புகார் வந்தால், அத்ன் பேப்பர்களை பரிசீலிக்க வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியல் நியாயமாக தயாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக அவர் கூறினார். 19 கட்சிகள், வாக்கு சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தியதாக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில, தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தியதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் மீது  நம்பிக்கை உள்ளதாகவும், எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.. வாக்குச்சீட்டு முறையோ, மின்னணு எந்திரம் முறையோ எதுவாக இருந்தாலும் தவறு நேரக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், வாக்குச்சீட்டு முறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டால் அதிமுகவுக்கு ஆட்சேபம் இல்லை என கூறியதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை எனவும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இல்லை எனவும் தம்பிதுரை கூறினார்.

Related Posts