பாஜக அலுவலகத்தில் ஸ்டாலின்

சென்னை தியாகராயர் நகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள  வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது.  விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாய் அஸ்தி கலசங்கள், தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக இரவு 7.30 மணிக்கு கொண்டுசெல்லப்ட்டது.

அங்கு பாரத மாதா சிலைக்கு முன்பு வைக்கப்பட்ட 7 அஸ்தி கலசங்களுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன்,முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இன்று காலை தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பாஜக அலுவலகத்துக்கு நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்

மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளி மாணவ மாணவிகள் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர்.வாஜ்பாய் அஸ்திக்கு இன்று முழுவதும் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை6.30 மணியளவில் அஸ்தியை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது. வாஜ்பாய் அஸ்தியை சென்னை, மதுரை,திருச்சி, கன்னியாகுமரி, ராமேசுவரம், ஈரோடு, தஞ்சை ஆகிய 7 இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

Related Posts