பானி புயல் ஒடிசாவில் இன்று கரையைக் கடக்கிறது: முன்னெச்சரிக்கையாக விமானங்கள் சேவை ரத்து

வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் இன்று கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல், அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. பானி புயல், ஒடிஸா மாநிலம், புரி நகரில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 320 கி.மீ.தொலைவில் மேற்கு-மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல், புரி நகருக்கும், கோபால்பூருக்கும் இடையே இன்று காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலை அடுத்து பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது

பானி புயல் முன்னெச்சரிக்கையாக, ஒடிஸாவில் கடற்கரையோரத்தில் வசிக்கும் 11.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பானி புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

அவசர மீட்புப் பணிகளுக்காக, கடற்படை, கடலோர காவல் படை, விமானப் படை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும், விமான நிலைய நிர்வாகத்தினருக்கும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், பானி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts