பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை : ஏப்ரல்-11

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம், தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம், நடிகர்-நடிகைகள் சார்பில் மவுன போராட்டம் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட முயன்றனர். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, தடையை மீறி, ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அன்புமணி ராமதாஸ், பி.ஆர். பாண்டியன் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தியாவில் தமிழகம் இல்லாதது போன்ற தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

பாமகவின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கரூர் மாவட்டத்தில், ஜவஹர்பஜார், கோவை சாலை, திண்ணப்பா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூர் ஆனிலியப்பர் டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, வாகனங்களை இயக்கவில்லை.

Related Posts