பாரதிய ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி அடையும்:மாயாவதி

உத்தரபிரதேசத்தில்  மகா கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தியோபந்த் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், காவலாளி கோ‌ஷத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்து உள்ளதாகவும், இது வெற்று கோ‌ஷம் எனவும் இதனால் எந்த பயனும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜனதா தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய அவர்,  கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் பா.ஜனதா அவசர, அவசரமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளதாகவும்,  ஏழைகள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையாக அக்கறை இருந்தால் முன்பே நலத்திட்டங்களை அறிவித்து தொடங்கி இருக்க வேண்டும் என்று கூறினார்.  

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை கடனில் தத்தளிக்க விட மாட்டோம் என குறிப்பிட்ட அவர், கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகையை அளிப்போம் என தெரிவித்தார். வெறுப்பு அரசியலால் பாரதிய ஜனதா அரசு தோல்வி அடையும் எனவும் அந்த இடத்தை தங்கள் கூட்டணி பிடிக்கும் என மாயாவதி தெரிவித்தார்.

Related Posts