பாரம்பரிய உணவுகளுடன் உடற்பயிற்சியும் அவசியம் : முதலமைச்சர் பழனிசாமி

உடல் ஆரோக்கியம் பேண, பாரம்பரிய உணவுகளுடன் உடற்பயிற்சியும் அவசியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

சென்னையில் உணவுத் திருவிழாவை தொடங்கிவைத்த அவர், பாரம்பரிய உணவுகளை தவிர்ப்பதால் உடலில் நோய்கள் வருகின்றன என்றார். பாரம்பரிய உணவுகளுடன் உடற்பயிற்சியும் அவசியமாகிறது என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடியின் ஃபிட் இந்தியா இயக்கம் மக்களின் உடல்நலனை பேண உதவும் என நம்பிக்கை வெளியிட்டார். கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற தானியங்களை உணவில் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநில நகர்ப்புற இயக்கம் சார்பில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பெயரிலான உணவு-கலாசார திருவிழாவை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னை தீவுத் திடலில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவானது வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 11 மணி முதல் இரவு 8மணி வரை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு உணவு நிறுவனங்கள் சார்பில் 160 அரங்குகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல வகையான உணவுப் பதார்த்தங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாரம்பரிய உணவுகள், மூலிகை உணவுகள் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களின் சிறப்பு உணவுகள் இடம்பெற்றுள்ளது. தொற்றா நோய்களை குணப்படுத்த பாரம்பரிய உணவுமுறைகளுக்கு மாற வேண்டும் என நோக்கத்தில் இந்த உணவு திருவிழா நடைபெறுகிறது.

Related Posts