பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த பலமான கூட்டணி அமைக்கப்படும் – ப.சிதம்பரம்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த பலமான கூட்டணி அமைக்கப்படும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் சூழல் மாறிவிட்டதாகவும்,  குறிப்பாக, பசு பாதுகாவல் என்ற பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தற்போதைய நிலையில்,  நாட்டில் ஜனநாயகமும், சுதந்திரமும் அறவே இல்லை என குறிப்பிட்ட அவர், ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வில்லை என்பதற்காகத்தான் விடுதலை வேள்வியே தொடங்கியதாகவும், அதுபோன்ற நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டு ஆட்சிக் காலத்திலும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது எனவும்,ஆனால் அதை திரித்தும், குறைத்தும் கூற மோடி அரசு முயன்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

புள்ளி விவரங்களை ஒரு போதும் மறைக்கவோ, மாற்றியமைக்கவோ முடியாது என்பதால் தான் முந்தைய காங்கிரஸ் அரசின் மீது பிரதமர் மோடி வீண் பழி சுமத்தி வருவதாக கூறினார். மேலும், மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம், தமிழகம் கேரளா உட்பட அனைத்து மாநிலங்களிலும் வலுவாக இருப்பதாகவும், அத்தகைய சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தும் ஓரணியாகத் திரண்டால், நிச்சயமாக தேர்தலில் பா.ஜ.க. வீழ்ச்சியை சந்திக்கும்எனவும் ப.சிதம்பரம் கூறினார்.

Related Posts