பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் சக வீரரின் உதவியுடன் முதலிடம்

பார்முலா1 கார்பந்தயத்தில் ரஷிய கிராண்ட்பிரியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன், சக வீரரின் உதவியுடன் முதலிடத்தை பிடித்தார்.

            இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடைபெற்றது. பந்தய தூரம்309 புள்ளி 745 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் இயக்கினர். இதில் மெர்சிடஸ் அணியைச் சேர்ந்தவரும், நடப்பு சாம்பியனுமான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 27 நிமிடம் 25 புள்ளி181 வினாடிகளில் முதல் வீரராக இலக்கை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். இந்த சீசனில் ஹாமில்டன் பதிவு செய்த8-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 70-வது வெற்றியாக இது அமைந்தது. தகுதி சுற்றில் வெற்றி பெற்று முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட மெர்சிடஸ் அணியைச் சேர்ந்த பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2புள்ளி 545 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் போட்டாஸ், ஹாமில்டனை விட முந்திதான் சென்று கொண்டிருந்தார். இருவரும் ஒரே அணி என்பதாலும்,ஹாமில்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கி விட்டதாலும் அவருக்கு வழிவிடும்படி அணி நிர்வாகம் உத்தரவிட்டது. அதற்கு கட்டுப்பட்டு போட்டாஸ் ஒதுங்கினார். இதனால் அவருக்கு 18 புள்ளிகள் மட்டுமே கிடைத்தன. முன்னாள் சாம்பியன்களும், பெராரி அணியைச் சேர்ந்தவர்களுமான ஜெர்மனியின் செபாஸ்டியன் 3-வதாக வந்து 15 புள்ளிகளையும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன்  4-வதாக வந்து 12புள்ளிகளையும் பெற்றனர். ரெட்புல் அணியைச் சேர்ந்த நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 5-வதாக வந்து 10 புள்ளி பெற்றார்.. போர்ஸ் இந்தியா அணி வீரர்களான பிரான்ஸ் நாட்டைச் சோந்த ஈஸ்ட்பான் ஒகான,  மெக்சிகோவைச் சேர்ந்த செர்ஜியோ பெரேஸ்  முறையே 9-வது, 10-வது இடங்களை பிடித்தனர். இந்த போட்டியை கடைசி கட்டத்தில் நேரில் கண்டுகளித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். 16 சுற்று முடிவில் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 256புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரெய்க்கோனன் 186 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த போட்டி வருகிற 7-ந்தேதி ஜப்பானில் நடைபெறுகிறது.

Related Posts