பாலக்கோட்டில் பயங்கரவாத முகாம் : ராணுவ தளபதி பிபின் ராவத்

பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு உதவியவர்களுக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றார். பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாகவும், குறைந்தபட்சம் 500 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் பகீர் தகவலை வெளியிட்டார். பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு வசதியாகவே, கவனத்தை திசை திருப்பும் வகையில்,  பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். அத்துமீறிய தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பது இந்திய ராணுவத்துக்கு தெரியும் எனக் குறிப்பிட்ட பிபின் ராவத், பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகளை நமது வீரர்கள் முறியடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts