பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கையை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 4 புள்ளி இரண்டு 5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் பாலாறு விளங்குவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தோன்றும் பாலாறு, 93 கிலோ மீட்டர் . தொலைவு கர்நாடகத்திலும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர் தொலைவும் பாய்ந்து, தமிழ்நாட்டில் 233 கிலோ மீட்டர்தொலைவுக்குப் பாய்ந்து பின்னர் வங்கக் கடலில் கலப்பதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

1892 ஆம் ஆண்டு சென்னை – மைசூர் மாகாணங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் 7ஆவது அட்டவணையில் குறிப்பிட்டபடி, பாலாறு பாயும் மாநிலங்களுக்கிடையே முன் அனுமதி பெறாமல் எவ்வித புதிய அணை கட்டுமானங்களோ, அணை தொடர்பான பணிகளோ மேற்கொள்ளக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 ஆனால், பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு கோலார் மாவட்டத்தில் பேத்தமங்கலம், ராம்சாகர் ஆகிய இடங்களில் பெரிய தடுப்பு அணைகள் கட்டி பாலாற்று நீரைத் தடுத்தது என்றும்பின்னர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதி வழியாக வேலூர் மாவட்டத்திற்குள் நுழையும்  பாலாற்று நீரை ஆந்திர அரசு மொத்தம் 22 தடுப்பு அணைகள் கட்டி தடுத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆந்திர அரசு 2006 ஆம் ஆண்டிலேயே சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றில் 320 கோடி ரூபாய் செலவில் பெரிய தடுப்பு அணையைக் கட்டத் திட்டமிட்டது என்றும். இதனை எதிர்த்து தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தடுப்பு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு கைவிடாததை அடுத்து மீண்டும் 2011- இல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, தனது ‘குப்பம்’ தொகுதியில் குடிநீர் மற்றும் பாசன மேம்பாட்டிற்காக ஹந்திரி-நீவா திட்டக் கால்வாய் குப்பம் வரை நீடிக்கப்படும் என்று அறிவித்தார் என்றும்

இதன்படி  மதனப்பள்ளி – குப்பம் வரை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குப்பம் தொடங்கி, வாணியம்பாடி அடுத்த புல்லூர் வரையில் உள்ள 22 தடுப்பு அணைகளின் உயரம் 5 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்திக் கட்டப்பட்டது என்றும் . இவற்றில் வேலூர் – வாணியம்பாடியை அடுத்த தகரக்குப்பம் அருகில் ஜோதி நகரில் சாமாபள்ளம், பெரும்பள்ளம், ஒக்கல்ரேவ், புல்லூர், கனகநாச்சியம்மன்கோவில் அருகே 5 அடி உயரம் இருந்த தடுப்பு அணைகள் முதலில் 12 அடியாகவும் பின்னர் 20 அடியாகவும் ஆந்திர அரசு உயர்த்திக் கட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக எல்லையில் உள்ள நாட்றாம்பள்ளியிலிருந்து சுமார்20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூல்குண்டா என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 50 அடி உயரத்துக்கு மிகப்பெரிய தடுப்பு அணையை ஆந்திர அரசு கட்டி முடித்துவிட்டதாகவும், நூல்குண்டா புதிய தடுப்பு அணை குப்பத்தை  அடுத்த கொத்தப்பள்ளியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர்  அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சூழலில்தான் கடந்த இரு வாராங்களாக பாலாற்றின் குறுக்கே ராமகிருஷ்ணாபுரம். சாந்திபுரம், போகிலிரே, கிடிமாணிபெண்டா ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பு அணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளை ஆந்திரா அரசு மேற்கொண்டு வருவதாகவும், போகிலிரே பகுதியில் 6 கோடி ரூபாய் செலவில் தடுப்பு அணையை உயர்த்தி, கட்டுமானப் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், பாலாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ஏ.சி.வெங்கடேசன் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள 22 தடுப்பு அணைகளையும் 40 அடி உயரம் வரை உயர்த்த ஆந்திரா அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் . தமிழக அரசு பாலாறு தடுப்பணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை விரைவுபடுத்தாமல் வாளா இருந்தது கண்டனத்துக்கு உரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொண்டு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும்என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.   மேலும் தடுப்பு அணைகள் அமைக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என்றும் தவறினால் பாலாற்றில் இனி சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதை உணர்ந்து செயல்பட வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் வைகோ எச்சரித்துள்ளார்.

Related Posts