பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு : தேர்வு வாரியம் முடிவு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக்குகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். இதில் 2 ஆயிரத்துக்கம் மேற்பட்டோரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வினாத்தாளில் முறைகேடு செய்து 196 பேர் தேர்ச்சி பெற்றதாக கூறி பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை என சுற்றிய இந்த வழக்கு, உச்ச நீதிமன்றம் சென்றது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் மற்றும் ஹேமந்த் குப்தா அமர்வு கடந்த 8-ம் தேதி பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த அரசாணை செல்லும் எனவும், மறுதேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றச் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தேர்வு அறிவிப்பு விரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts