பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட ஆசிரியரை அம்மாநில பள்ளிக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ராஜசேகர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த அவர் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதனை மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகள் நல அமைப்பு மற்றும் , வில்லியனூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை தேடி வருகின்றனர். இதனிடையே, தலைமறைவாக உள்ள ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையறிந்த பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Related Posts