பாலியல் வன்கொடுமை சம்பவங்களை அரசியலாக்காதீர்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

 

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது என்பது சமூகத்திற்கு எதிரான குற்றம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, பாலியல் வன்முறைகளை அரசியலாகக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

லண்டன், ஏப்ரல்-19

பிரிட்டன் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்போது மோடி கூறியதாவது ;- 

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் போது, நாம் கடந்த கால அரசாங்கத்தின் போது நடைபெற்ற எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமைதான். இதை எவ்வாறு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்? இப்பிரச்சினையில் அரசியல் செய்யக்கூடாது.

எப்போது நடந்திருந்தாலும் பலாத்காரம், பலாத்காரம் தான். அது பொறுத்துக் கொள்ள முடியாதது. இதில் யார் ஆட்சியில் அதிக பலாத்காரங்கள் நடந்தது என ஒப்பிடுவது மோசமானது. இதுபோன்ற குற்றங்களை செய்யும் ஆணும் யாரோ ஒருவரின் மகன் தான். பெண்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என அனைவரும் தங்களின் மகன்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். சமீபகால பாலியல் தாக்குதல்கள் இந்தியாவை அவமானப்பட வைக்கும் செயல் ஆகும். நமது நாட்டில் ஒவ்வொரு முறையும், பெண்களே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர்.

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய பேசிய மோடி, நாங்கள் அமைதி மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதே சமயம் பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்தியர்களை கொல்ல பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு புரியும் மொழியிலேயே அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம் என்றார்.

 

Related Posts