பால் விலையை தொடர்ந்து நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலையையும் உயர்த்த ஆவின் நிறுவனம் திட்டம்

பால் விலையை தொடர்ந்து நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலையையும் உயர்த்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், பால் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என அரசு அறிவித்துள்ளது. பால் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மாதாந்திர பால் அட்டை வைத்திருப்பவர்கள் இனி மாதந்தோறும் லிட்டருக்கு கூடுதலாக 180 ரூபாய் கட்ட வேண்டும். பல கடைகளில் ஆவின் பாலுக்கு பதிலாக தனியார் பாக்கெட் பால்களை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால், ஆவின் பாலைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதேபோல் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் டீ, காபி விலையை விரைவில் உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெய், வெண்ணெய், பால் பவுடர் விலையையும் விரைவில் உயர்த்த ஆவின் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஆவின் பாலகங்களில் தற்போது ஒரு கிலோ நெய் 460 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெண்ணெய் கிலோ 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலையை மாற்றி அமைத்து அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்று ஆவின் ஊழியர்கள் தெரிவிக்கினறனர்.

Related Posts