பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என தமிழக அரசுக்கு வைகோ கேள்வி

தமிழகத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலையில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாகி திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைஅலுவலகத்தில் நடைபெற்றது. இதில்  பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தீபச் சுடரை ஏற்றி வைத்து திலிபனின் திருவுருவப படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, திலீபனின் உயிச் சுடர் அணைந்துபோன நாள் எனவும், துளி நீரும் பருகாமல் 12 நாட்கள் நல்லூர் கந்தசாமி கோயில் எதிரே உள்ள மைதானத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கண்ணீர் சிந்தி அழ, திலீபன் அழைப்பது சாவையா, இந்த சின்ன வயதில் இது தேவையா என உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனுடைய சோகக் குரல் உயர்ந்து எழ, சிறுகச் சிறுக அந்த உயிர்ச் சுடர் அணைந்து கொண்டே வந்ததாக கூறினார், எந்த சுதந்திர தமிழ் ஈழத்திற்காக திலீபன் உயிர் நீத்தாரோ அந்தக் கனவை நனவாக்கவும், தேசியத் தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தை நிறைவேற்றவும் திலீபனின் நினைவு நாளில் சூளுரை ஏற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

நாட்டில் சிந்தனையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும்,  மதச்சார்பின்மையை சிதைத்து, நல்லிணக்கத்தை குலைக்க சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்துத்வா சக்திகளின் பின்னணியில் மத்திய ஆளும் அரசு செயல்பட்டு வருவதாக அவர் சாடினார்.. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிப்புக்கு எச்.ராஜாவே காரணம் எனவும், தமிழகத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜாவை ஏன் கைது செய்யவில்லை எனவும் வைகோ கேள்வி எழுப்பினார்.

நாடளுமன்ற தேர்தலில்  வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்ற உறுதியில் மக்கள் உள்ளனர் எனவும், ஈழ தமிழர் இனப்படுகொலைக்கு இலங்கை முன்னாள் அதிபர்இராஜபக்சே தான் காரணம் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்

 

Related Posts