பிஆர்பி கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கிரானைட் முறைகேடு தொடர்பாக பிஆர்பி கிரானைட் நிறுவனர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவன பங்குதாரர் பழனிசாமி, அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறையும் தனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இதனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பாயத்தில் தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் முறைப்படி உரிமம் பெற்றே கிரானைட் தொழில் செய்தோம் என்றும் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதுவரை விசாரணைக்கு தடை விதித்தும், நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும் என்றும் பி.ஆர்.பி தரப்பில் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரானைட் வழக்குகளோடு மாற்றி உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.

Related Posts