பிப்.8-ஆம் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வரும் 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது

17-வது மக்களவைத் .தேர்தலுக்கான  தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சிகளின் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரதான கட்சியான அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக, நேற்று முதல் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை அக்கட்சி பெற தொடங்கியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வினியோகத்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். ஏற்கனவே,  அதிமுக சார்பில் கூட்டணி குறித்து பேச குழு, பிரசார ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு என தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது அதி.முக அடுத்த கட்ட நடவடிக்கையாக தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வரும் 8-ந்தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு  வெளியிடப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கஅமைச்சர்கள்,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Related Posts