பியூஷ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலத்தை சேர்ந்த மானுஷ், பொருளாதார மந்த நிலை மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும், தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது பற்றியும் பாஜக-வினரிடம் கேள்வி கேட்க உள்ளதாக முகநூலில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பா.ஜ.க. அலுவலகம் சென்ற பியூஷ் மானுஷுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான, அபாய எச்சரிக்கையாகவே பியூஷ் மானுஷ் மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பாஜக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த பியூஷ் மானுஷ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாஜக தொண்டர்களை தாக்கி பியூஷ் மானுஷ் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Related Posts