பிரதமர் இம்ரான் கான் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துக் கொள்கிறார் : மோடி குற்றம் சாட்டு

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கலந்து காணப்படுகிறது. சர்வதேச அளவில், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட சில நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘எனது நல்ல நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவரிடமும் பேசினேன். வர்த்தகம், கூட்டாண்மை குறித்தும், முக்கியமாக காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலை குறைக்க இந்தியா-பாகிஸ்தான் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினேன். சூழல் கடுமையானதுதான், ஆனால், நல்ல முறையில் உரையாடல் நிகழ்ந்து முடிந்தது என டிரம்ர் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, தொலைபேசி உரையாடல் 30 நிமிடங்கள் நடந்ததாகவும், அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துக் கொள்கிறார் என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts