பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம்  தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், எல்லையில்  போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியது. இதனால், இரு நாடுகளின் உறவு மோசமடைந்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமராக அண்மையில் பொறுப்பேற்ற இம்ரான்கான், பாகிஸ்தானும் இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும், காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், பதவியேற்றபோது வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐநா பொதுசபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் சந்தித்து பேசவேண்டும் என்று அந்த கடிதத்தில் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஐநா பொதுசபை கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Related Posts