பிளஸ் 1 பொதுத் தேர்வில் 91 புள்ளி 3 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 91 புள்ளி 3 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  97 புள்ளி 3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை : மே-30

தமிழகத்தில் முதன்முறையாக, 11 ஆம் வகுப்பு வகுப்புக்கு 2017-18ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. மார்ச் 7ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 16ஆம் தேதி முடிவுற்ற தேர்வுகளை 8 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணியளவில் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் வெளியிடப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக, மதிப்பெண் அனுப்பப்பட்டது. அதன்படி, தேர்வு எழுதியவர்களில் 91 புள்ளி 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94 புள்ளி 6 சதவீதம் பேரும், மாணவர்கள் 87.4 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 வகுப்புகளைப் போன்று, 11 ஆம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்த தேர்வில், 97 புள்ளி 3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் 96 புள்ளி 4 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் 2ஆம் இடத்தையும், 96 புள்ளி 2 சதவீத தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்நிலையில், 11 ஆம் வகுப்பு தேர்வில், தோல்வியடைந்தவர்களுக்கு, ஜூலை 5ஆம் தேதி மறுத்தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts