பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிச்சாமி

 பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

      சுற்றுசூழல் மற்றும் வனத்துறை சார்பில் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு இணையத்தளம், செயலி மற்றும் இலச்சினையை அவர் அறிமுகப்படுத்தினார். பின்னர் பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை தயாரிக்க தொழில் முனைவோர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினர்

      அப்போது பேசிய முதல் அமைச்சர் பழனிச்சாமி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் முதல் தடை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பொது மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மாற்று பொருட்களை பயன்படுத்தினால் சுகாதார வாழ்க்கை அமையும் என்று அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் இல்லா தமிழகம் உருவாக வியாபாரிகள்,பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அரசு கோப்புகளின் மேல் உறைகள்  கூட இன்று முதல்  காகிதத்தால் ஆன உறைகளே பயன்படுத்தப்படும் என்று கூறிய முதல்வர், பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தின் விளம்பர தூதர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts