பி.இ படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு

பி.படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை : ஜூன்-28

509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று வெளியிட்டார். 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களை 10 பேர் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அதில், கோவையைச் சேர்ந்த கீர்த்தனா ரவி, மதுரையைச் சேர்ந்த ரித்விக், திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீ வர்ஷினி, கோவையைச் சேர்ந்த அர்ஜூன் அசோக், புதுக்கோட்டையைச் சேர்ந்த சுஜிதா ஆகியோர் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி அப்துல் காதர், சிவகங்கை யமுனா ஸ்ரீ, திருவள்ளூர் நிஷா, தஞ்சாவூர் நிதீஷ்குமார், திருவள்ளூர் மணிகண்டன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்குப் பின் பொறியியல் கலந்தாய்வு தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தரவரிசைப் பட்டியல் www.annauniv.edu என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.

Related Posts