புதிய உச்சமாக, தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது

வரலாற்றில் புதிய உச்சமாக, தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.30 ஆயிரத்து 120-க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாகக் காணப்படும் வர்த்தக சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. சீனாவில் 27 ஆண்டுகளில் இல்லாத வர்த்தக மந்தநிலை நீடிக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற வர்த்தக சுணக்கம் பெரிய அளவில் இருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 36 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 765 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 288 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 120 ரூபாயாக விற்பனை ஆகி வருகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 55 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Related Posts