புதிய கதவணைகள் கட்டப்படும்: எடப்பாடி பழனிச்சாமி

   முக்கொம்பில் 325 கோடி ரூபாய் செலவில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் நேற்று முன்தினம் இரவு 8 மதகுகளும் 4 தூண்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று காலை மேலும் ஒரு மதகு உடைந்தது. இதனால் திருச்சி – கரூர் சாலையில் போக்குவத்து பாதிக்கப்பட்டது. அணையை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முக்கொம்பு மேலணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 325 கோடி ரூபாய் செலவில் முக்கொம்பில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும் என அறிவித்தார். 100 மீட்டர் தள்ளி கதவணைகள் கட்டப்படும் என அவர் மேலும் கூறினார். புதிய கதவணை கட்டும்பணி விரைவில் தொடங்கும் எனவும்,கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அய்யன்வாய்க்காலிலும் 85 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி 4 நாட்களில் முடியும் என கூறிய முதல்வர், புதிய கதவணைகள் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றார். அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பழமையான அணையின் மதகு உடைந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன் வைப்பதாக அவர் தெரிவித்தார். பல்வேறு அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் வந்ததன் காரணமாகவே  கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது எனவும், அங்குள்ள 80 அணைகளில் இருந்து ஒரே நேரத்தில்  தண்ணீர் திறக்கப்பட்டது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

Related Posts