புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழகம், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழகம், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

கஸ்தூரி ரங்கன் குழுவின்  புதிய கல்வி கொள்கை  வரைவு அறிக்கையில் நாடு முழுவதிலும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிக்க மத்திய அரசு முற்படும் என்பதால் இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்,  புதிய கல்வி கொள்கை இந்தி திணிப்பு என்பதுடன் மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவம் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி அம்சங்களுக்கு எதிரானது என எச்சரித்துள்ளன. மேலும் இந்தப்பிரச்சினையை, நாடாளுமன்றத்தில் எழுப்பி  திமுக உறுப்பினர்கள்  அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க வருமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது குறித்து விவாதிக்க உள்ளதாக பொக்ரியால் தெரிவித்தார்.  புதிய கல்வி கொள்கை குறித்து  வரும் 8-ந்தேதி  விவாதிக்க  அனைத்து மாநில முதலமைச்சர்களும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஏற்கனவே அழைப்பு விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது

Related Posts